“என்னால முடியல… குடும்பத்த துன்பப்படுத்தாதீங்க” — அதிமுக நிர்வாகி தற்கொலை


திருப்பூர் மாவட்டம் பெல்லம்பட்டி செங்காட்டு தோட்டத்தை சேர்ந்த செல்வானந்தம் (27) அதிமுக குண்டடம் மேற்கு தகவல் தொழில்நுட்ப ஒன்றியச் செயலாளராக பணியாற்றி வந்தார். அவர் மனைவி முத்து பிரியா மற்றும் மகனுடன் குடும்பம் நடத்தி வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக மக்காச்சோள வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், செல்வானந்தம் சங்கிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் விஷ மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தீவிர சிகிச்சையிலும் அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே, செல்வானந்தத்தின் செல்போனை ஆய்வு செய்த மனைவி முத்து பிரியா அதில் இருந்த ஆடியோவை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். செல்வானந்தம் தற்கொலைக்கு முன் தனது ஐபோனில் இருந்து மற்றொரு தொலைபேசிக்கு ஆடியோ பதிவு அனுப்பியிருந்தார்.

அதில், மதுரை மண்டல திமுக பொறுப்பாளர் பி.டி. மணிமாறன் மற்றும் மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் இருவரும் சேர்ந்து மக்காச்சோள வியாபாரத்தில் ஏமாற்றி பணத்தை பறித்ததாகவும், காவல்துறையினரை மூலமாக மிரட்டி பணம் எழுதி வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 15 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் போலியாக பில் தயாரித்து, 40 லட்சம் மற்றும் 45 லட்சம் ரூபாய் என்ற இரண்டு காசோலைகளை பெற்று, தனது மனைவி பெயரில் உள்ள ஓம் முருகா ஆயில் மிலுக்கு மோசடி வழக்கு பதிய மிரட்டியதாக கூறியுள்ளார்.

மற்றொரு ஆடியோவில், “நான் போனதுக்கு அப்புறம் என் குடும்பத்தை யாரும் துன்பப்படுத்தாதீங்கப்பா… தயவு செஞ்சு யாரையும் யாரும் ஏமாத்தாதீங்கப்பா… என்னால முடியல…” என கண்களில் நீர் தொங்க பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செல்வானந்தத்தின் மனைவி முத்து பிரியா ஆடியோ ஆதாரங்களுடன் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.