
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில், பொங்கல் தினமான கடந்த ஜனவரி 14ஆம் தேதி, ஆட்டோ டிரைவரான வாலிபர் ஒருவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அவரை போலீஸ் நிலையத்திற்குள் கொண்டு சென்ற போலீசார், இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுயசம்பு உட்பட அதிகாரிகள் நேரடியாக தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
இந்த வீடியோவினை வாலிபரின் வக்கீல் வெளியிட்டுள்ளார். அதில், காவலர்கள் வாலிபரை காலால் எட்டி உதைக்கும் காட்சிகளும், லத்தியால் அடிக்கும் காட்சிகளும் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த வாலிபர் தற்போது தேவதானப்பட்டியில் ஆட்டோ ஓட்டியே வாழ்க்கை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேவதானப்பட்டி காவல் நிலைய வீடியோ வெளியானது மாநிலம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தேவதானப்பட்டி போலீசாரின் தாக்குதல் குறித்து ஏ.டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தாக்குதலுக்கு ஆளான வாலிபருக்கு நியாயமான இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அவருடைய குடும்பத்திடம் விசாரணையின் நிலை தெளிவாக கூறப்படவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.