
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிகிதா (41) மற்றும் அவரது தாய் சிவகாமி (76) இருவரும் கடந்த 28ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலுக்கு காரில் சென்றனர். கோவிலில் காவலாளியாக பணியில் இருந்த அஜித்குமாரிடம் (28) தனது காரை ஓரமாக நிறுத்திக் கொடுக்குமாறு சாவியை ஒப்படைத்துள்ளனர்.
கோவிலில் தரிசனம் முடிந்து திரும்பிய நிகிதா, காரில் வைத்திருந்த 9½ சவரன் நகை காணவில்லை எனக் கூறி அஜித்குமாரிடம் கேட்டபோது, அவர் தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார். பின்னர் நிகிதா மானாமதுரை போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் அஜித்குமாரை விசாரித்தனர். விசாரணையில் போலீசார் தாக்கியதாக கூறப்படும் நிலையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் திருப்புவனம் இளைஞர் அஜித் மீது முதலில் புகார் அளித்த நிகிதா மீதான புகார் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை பண மோசடி செய்ததாக நிகிதா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருந்தது. 2010ஆம் ஆண்டு, துணை முதல்வர் உதவியாளரைத் தனக்குத் தெரியும் எனக் கூறி வேலை வாங்கித் தருவதாக நம்பவைத்து பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
பணம் திருப்பிக் கேட்டு கேட்டபோது நிகிதா அவரது குடும்பத்தினரை மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் அஜித் மரணம் தொடர்பான விசாரணையில் இந்த தகவல் மேலும் பரபரப்பை தூண்டியுள்ளது