சி.பி.எஸ்.இ பள்ளியில் 7 வயது மாணவன் மூச்சுத்திணறி மரணம்: மூவர் கைது!

"A 7-year-old boy dies due to breathing issues in a CBSE school; three arrested amid negligence allegations."

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சி.பி.எஸ்.இ பள்ளியில் மதுராபுரி வேங்கைபெட்டியைச் சேர்ந்த 7 வயது அஸ்வந்த் என்ற சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளி வாகனத்தில் செல்லும் அவ்வந்த், சம்பவத்தன்று  பள்ளி வாகனம் வராததால், மாற்று ஏற்பாடாக பள்ளியின் சார்பில் காரில் அழைத்து செல்லப்பட்டார்.

மாலை நேரத்தில் பள்ளி பணியாளர்கள் அவ்வந்தின் பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்து, அவருக்கு பிக்ஸ் (fits) வந்து சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தெரிவித்தனர். உடனே  பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவ்வந்த் வாய், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மரணமடைந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தகவலறிந்த சிங்கம்புணரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில் காலை பள்ளிக்கு அழைத்து வந்த காரில் மற்ற மாணவர்கள் இறங்கி விட்டும் அவ்வந்த் மட்டும் காருக்குள் தவறுதலாக மூடப்பட்ட நிலையில் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. ஓட்டுநர் ஜான் பீட்டர் கவனிக்காமல் காரை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாணவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல காரை திறந்தபோது  அவ்வந்த் காருக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிங்கம்புணரி போலீசார் பள்ளியின் தாளாளரின் கணவர் சங்கர நாராயணன், அவரது மகன் மகேஷ் குமார் மற்றும் கார் ஓட்டுநர் ஜான் பீட்டர் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பள்ளி பாதுகாப்பு முறைகள் குறித்த கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.