
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், திருமணமான நான்காவது நாளிலேயே வரதட்சணை கொடுமையால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
24 வயது லோகேஸ்வரி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த ஜூன் 27ஆம் தேதி, காட்டாவூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தில் 4 சவரன் நகை, பைக் மற்றும் திருமண சீர்வரிசை பொருட்கள் சீதனமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 5 சவரன் கொடுப்பதாக முன்னதாக சொல்லிய நிலையில் மீதமுள்ள 1 சவரன் நகைக்காக கணவர் பக்கம் தொடர்ந்து லோகேஸ்வரி மீது அழுத்தம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
குடும்பத்தில் முன் வந்த மருமகள் 12 சவரன் நகை கொண்டு வந்ததாகக் கூறி ஒப்பிடப்பட்டதாகவும், லோகேஸ்வரியை வீட்டுவேலைகளை செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் “சோபாவில் அமர கூடாது… பாத்திரம் கழுவு… துணி துவை…” என்று மாமியார் உள்ளிட்டோர் கொடுமைப்படுத்தியதாகவும் லோகேஸ்வரி தாயிடம் தெரிவித்துள்ளார்
மேலும், வீட்டிற்கு ஏசி வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மனஅழுத்தத்தில் இருந்த லோகேஸ்வரி தாய் வீட்டுக்கு வந்திருந்தபோது, கழிப்பறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் .உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
பொன்னேரி காவல்துறை, லோகேஸ்வரியின் கணவர் பன்னீர் மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தி வருகிறது. குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அவர்களிடம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் அண்மையில் ஒரே மாதத்தில் புதுமண தம்பதியில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் இன்னும் மக்கள் மனதில் மறையாமல் இருக்கும் நிலையில், ஒரு சவரன் நகைக்காக இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சமூகத்தில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.