திருப்புவனத்தில் போலீசார் தாக்கி இளைஞர் உயிரிழப்பு: அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு!

"News of a youth's death in Thirupuvanam after alleged police assault; viral video sparks outrage."

திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவதையடுத்து 5 போலிசார் கைது செய்யபட்ட நிலையில், பொலிசாரால் இளைஞர் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களையும் கைது செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

கைதான காவலர்களான பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவி வரும்  வீடியோவில், சீருடை அணியாத போலீசார் அஜித்தை விசாரணையின் பெயரில் பிரம்பால் அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி மக்கள் எதிர்ப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்புவனம் அருகே இருந்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்தின் உடலில் 18 க்கும் மேற்பட்ட காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வலது கை, நெற்றி, கன்னம், தோள்பட்டை, விலா, காதுகள், இடுப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் இருந்ததாகவும், இடது காதில் ரத்தம் வடிந்ததும், வலது காதில் ரத்தம் உறைந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையும், மருத்துவமனை முதல்வர் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் பல இடங்களில் கிளம்பியுள்ளது.

இளைஞர் அஜித்தின் மரணம் காவல்துறையின் விசாரணை நடைமுறைகள் மீதான கேள்விகளை மீண்டும் எழுப்பி இருக்கிறது. சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த வழக்கை தீவிரமாக ஆராய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.