
புதுடில்லி: குஜராத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து விமான விபத்துகள் விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. பி.ஜே. மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.
ஜூன் 13ம் தேதி முதல் கருப்புப் பெட்டியும், ஜூன் 16ம் தேதி 2வது கருப்புப் பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டது. கருப்புப் பெட்டியின் தரவுகள் விமான விபத்துகள் விசாரணை ஆணையத்தில் பதவிறக்கம் செய்யப்பட்டு CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு ஐ.நா. விமான போக்குவரத்து ஆணையம் உதவ முன்வந்துள்ளது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளை பின்பற்றி, உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. பெரும்பாலான விமான விபத்துக்களின் முதற்கட்ட அறிக்கைகள், விபத்து நடந்த 30 நாட்களுக்குள் வெளியிடப்படும். அந்த வகையில், கருப்பு பெட்டியில் இருக்கும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஏர் இந்தியா விமான விபத்துக்கான முதற்கட்ட அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது