
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எட்டாவது வார்டு கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசுப் பள்ளி காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு பெற்றுவருகின்றனர்.
அந்த உணவு, ஒப்பந்ததாரர் ஒருவரின் ஏற்பாட்டில் காங்கேயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தயாரிக்கப்பட்டு பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை சுமார் 40 மாணவர்கள் உணவருந்த தயாராக இருந்தனர். இதில் முதல் கட்டமாக சாப்பிட்ட மாணவனின் சாம்பாரில் இறந்த பல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்த உணவை சாப்பிட்ட நான்கு மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பள்ளியிலேயே மயங்கி விழுந்தனர்.
உடனடியாக ஆசிரியர்கள் மாணவர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உட்பட அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் உடல் நலத்தை பார்வையிட்டு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சாம்பாரில் பல்லி கிடைத்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உணவு தரத்தைப் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.