
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடந்த கனிமவளக் கொள்ளை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஜபகர் அலி படுகொலை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரிகளில் அகழ்வுகளை மேற்கொண்டதற்கு , எதிராகப் போராடிய அ.தி.மு.க. சமூக ஆர்வலர் ஜபகர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட குவாரி முதலாளிகளின் செல்போன்களில் இருந்த அழைப்புப் பதிவுகள் காவல்துறையினர் மூலம் அழிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களின் பட்டியலில் சில போலீசர்களின் எண்களும் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ஏ.டி.எஸ்.பி முரளிதரன் விசாரணை மேற்கொண்டார். அதில் புதுக்கோட்டை எஸ்.பி எஸ்.ஐ பிரபாகரன் குவாரி முதலாளிகளுடன் தொடர்பில் இருந்ததும், மாவட்டம் முழுவதும் உள்ள கனிமவளக் கொள்ளையர்களுடன் தொடர்ச்சியாக பேசியதும் வெளிச்சத்துக்கு வந்தது.
அறந்தாங்கியில் பணியாற்றிய எஸ்.ஐ ஒருவர், திருட்டு மணல் லாரியை பிடித்தபோது அந்த லாரியை விடச் சொல்லி எஸ்.பி எஸ்.ஐ அழைத்ததற்கான ஆடியோ பதிவு ஆதாரமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., எஸ்.ஐ. பிரபாகரன், தனிப்பிரிவு போலீசார் செல்வேந்திரன், ராமபாண்டியன் மற்றும் மீன்சுருட்டி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியன் ஆகிய நால்வரையும் தென் மண்டலத்திற்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால் மத்திய மண்டல காவல்துறையில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.