
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள பகுதியில், கடந்த இரவு சாலையோரம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த முகேஷ் என்பவர்மீது திடீரென நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாக்குதலில் முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் அவரது அருகிலிருந்த நண்பர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மப்பேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் முகேஷை கொலை செய்தவர்கள் ஆகாஷ் உட்பட 5 பேர் என உறுதி செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
முகேசின் தம்பி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாசுடன் பழகி வந்து உள்ளார். ஆகாசின் தவறான நடவடிக்கைகளை கண்டித்து முகேஷ் தனது தம்பியை ஆகாசுடன் பழகுவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆகாசை முகேச் வெட்டி அவருது காதில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
இதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போது கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவ இடத்தை திருவள்ளூர் துணைப் போலீஸ் சூப்பிரண்டு, தமிழரசி, மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் பார்வையிட்டனர்.
மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த முகேசின் மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். மோப்பநாய் நிக்கி வரவழைக்கப்பட்டது. கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டு கிடைத்தது எப்படி? இதில் ரவுடி கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.