
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவி அருகே, மகளிர் இலவச பஸ் தொடர்பாக சர்ச்சையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரையில் இருந்து சுற்றுலா பயணமாக வந்த இரண்டு பெண்கள், தங்களது குழந்தைகளைத் தங்களுடன் வைத்துக்கொண்டு பழைய குற்றாலிலிருந்து மெயின் அருவி செல்லும் அரசு பஸ்சில் ஏறினர்.
அப்போது பஸ்சில் கண்டக்டராக இருந்தவர், இவை இலவச பஸ்கள் எனக் கூறி, அவர்கள் பஸ்சில் ஏற அனுமதிக்காமல் கீழே இறங்குமாறு கூறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்த கண்டக்டர் அலட்சியமாக “அடுத்த பஸ்சில் போங்கள்” எனத் தெரிவித்ததையடுத்து, பெண்கள் ஆத்திரமடைந்து பஸ்சை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “இது மகளிர் இலவச பஸ் அல்லவா? எங்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியதோடு, அவமதிக்கப்பட்டதாகக் கூறினர்.
இதையடுத்து அந்த இடத்தில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலரும் ஒன்று கூடி, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சில நிமிடங்களுக்கு அந்த பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது. பின்னர் பொது மக்களின் தலையீட்டால் நிலைமை சற்று சீரடைந்தது.
இந்தச் சம்பவம், அரசு இயக்கும் மகளிர் சிறப்புப் பேருந்துகள் மற்றும் பயணிகளுக்கான நடத்தையில் உள்ள குறைபாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு போக்குவரத்துத் துறையினர், இதுபோன்ற புகார்கள் தொடர்பாக தெளிவான விளக்கங்களும் நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.