
சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடந்த போட்டியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த நிலையில்,வரலாற்றை மாற்றி அமைக்குமா ஆர்சிபி… சிஎஸ்கே -வின் வெற்றி தொடருமா என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஐபிஎல்-லில் எல் கிளாசிகோ எனப்படும் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இடையிலான போட்டிக்கு சற்றும் குறைவில்லாதா போட்டியாக அமைந்து வருகிறது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையிலான போட்டி.
சென்னையில் 2008, மே 20ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கடைசியாகவும், முதல்முறையாகவும் சிஎஸ்கே அணியை 14 ரன்களில் ஆர்சிபி அணி வென்றது. அதன் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக 8 முறையும் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபியால் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
ஆர்சிபி, சிஎஸ்கே அணிகள் இதுவரை 33 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே அணி 21 முறை வென்றுள்ளது, ஆர்சிபி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த கால வரலாற்றில் சிஎஸ்கே அணியின் ஆதிக்கமே பரந்து கிடக்கிறது.
கடந்த சீசனை எடுத்துக்கொண்டால் ஆர்சிபி தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்தாலும் பிற்பகுதியில் அடுத்தடுத்து தொடர் வெற்றிகளைப் பெற்றது. 14 போட்டிகலில் 7 வெற்றிகள், 8 தோல்விகளுடன் 46% வெற்றி சதவீதத்தைப் பெற்றது. அதேநேரத்தில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 50 சதவீத வெற்றிகளைப் பெற்றது. ஏறக்குறைய சிஎஸ்கேவுக்கு இணையாக எந்தவிதத்திலும் குறைவில்லாத ஃபார்மில்தான் ஆர்சிபி இருக்கிறது.
ஆர்சிபி, சிஎஸ்கே அணியில் வலுவான பேட்டர்கள், துல்லியமான நெருக்கடி கொடுக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், சிஎஸ்கேவில் எம்எஸ் தோனியின் வியூகம் கடைசி நேரத்தில் பிரமாஸ்திரமாக மாறிவிடுகிறது. அங்குதான் ஆர்சிபியின் பலவீனப் புள்ளி வெளிப்படுகிறது. இந்த முறை ஆர்சிபி அணி பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங்கில் என நல்ல ஃபார்மில் இருப்பதால், நிச்சயமாக சேப்பாக்கம் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கலாம்.