
கோவை மாவட்டம் வால்பாறை பச்சமலை எஸ்டேட்டில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் ஜார்க்கண்டைச் சேர்ந்த மனோஜ் – மோனிகாதேவி தம்பதியின் 4 வயது மகளான ரோஷினி, வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டிற்கு அருகிலுள்ள காளியம்மன் கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது திடீரென பக்கத்து புதரிலிருந்து பாய்ந்து வந்த சிறுத்தை ஒன்று, குழந்தையை தாய் கண்முன்னே வாயில் கவ்விக் கொண்டு கொண்டு ஓடியதாக,கூறப்படுகிறது
தாயான மோனிகாதேவி சிறுத்தையை துரத்தியும், அது தேயிலை தோட்டத்தின் உட்புரத்தில் ஓடி ஒளிந்து கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வனத்துறையினர், போலீசார், மோப்ப நாய் மற்றும் ட்ரோன் உதவியுடன் தேடும் பணி தொடங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த தேடுதல், இரவு 3 மணி வரை நீடித்தது. அதில் ரோஷினியின் ஆடைகள் மட்டுமே மீட்கப்பட்டன. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால், தேடுதல் காலை 7 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டது.
இன்று காலை 11.30 மணியளவில், கோவிலில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில், ரோஷினியின் சடலம் மீட்கப்பட்டது. உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் வால்பாறை மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இதேபோன்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இப்பகுதியில் மற்றொரு குழந்தை சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்தது நினைவூட்டப்படுவதால், மக்கள் வனத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தே கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
சிறுத்தைகள் திடீரென குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவதற்கான காரணங்கள், அவற்றின் இருப்பிடக் குறைபாடுகள் மற்றும் உணவுக்கொள்கை மாற்றங்கள் போன்றவை குறித்து வனத்துறையினர் உடனடி ஆய்வு செய்து, மக்கள் பாதுகாப்புக்கான முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் என பலரும் கூறி வருகின்றனர்.