
ஈரான் அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையில் ஈரான் நவீன ரக ஏவுகணைகளை கொண்ட மிகப்பெரிய சுரங்க வீடியோவை வெளியிட்டுள்ள பிராந்திய பதற்றத்தை அதிகரித்துள்ளது
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரான் அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டி ஈரானுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஈரான் அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, தாங்கள் அணு ஒப்பந்தத்தை மீறவில்லை என்றும், புதிய ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதை தடுக்கும் விதமாக, புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவர வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி ஈரான் அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்
இக்கடிதத்துக்கு பதிலளித்த ஈரான் அரசு, அமெரிக்காவின் உத்தரவுகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்க முடியாது எனக் கூறியுள்ளது . மேலும், “நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்று கடுமையான பதிலடி வழங்கியது.
எனினும், ட்ரம்ப் ஈரானுக்கு இரண்டு மாத கால அவகாசம் அளித்ததாகவும், அந்த காலக்கட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு அமராவிட்டால் கடுமையான பொருளாதார தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கடுமையாக எச்சரித்தார்.
இந்நிலையில், ஈரான் தனது ராணுவ வலிமையை உலகிற்கு காட்டும் விதமாக, பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில் சேமித்துள்ள நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளது
‘ஏவுகணை நகரம்’ எனக் குறிக்கப்பட்ட அந்த வீடியோவில், ஈரான் ராணுவத்தின் அதிநவீன ஏவுகணைகள் காட்டப்படுகின்றன.
அந்த வீடியோவில், ஈரானின் உயர்மட்ட ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது ஹொசைன் பகேரி மற்றும் ஐஆர்ஜிசி விண்வெளிப் படைத் தலைவர் அமீர் அலி ஹாஜிசாதே ஆகியோர் கோட்டை வளாகத்தை சுற்றிப் பார்ப்பது காட்டப்படுகின்றதுடன் ஈரானின் சக்திவாய்ந்த ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் காண்பிக்கப்படுகின்றன.
நீண்ட சுரங்கப்பாதைகள் மற்றும் பரந்த குகைகளில் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
வீடியோவின் இறுதியில், “இன்று தொடங்கினால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம்” என ஈரான் அறிவித்துள்ளது.
இந்த வீடியோ அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்பட ஈரானின் எதிரிகளுக்கு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கெனவே நிலவி வரும் பதற்றமான போர் சூழ்நிலையை இந்த வீடியோ பதற்றதை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் ஏற்கனவே பல்வேறு ஏவுகணை நகரங்கள் மற்றும் கடற்படை சுரங்கங்களை உலகிற்கு காண்பிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுள்ளதையும் குறிப்பிடத்தக்கது.