
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவரின் இடத்தில் செயல்பட்டு வந்த நித்யானந்தாவின் ஆசிரமம், அரசு அனுமதியின்றி செயல்படுவதாகக் கூறி, ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்து, பக்தர்களை வெளியேற்ற உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா பீட அறங்காவலர் சந்திரசேகரன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள்:“நித்யானந்தா இப்போது எங்கு இருக்கிறார்? கைலாசா என்ற நாடு உண்மையில் எங்கே? அந்த நாட்டுக்கு எப்படி செல்லலாம்? அங்கு செல்ல பாஸ்போர்ட், விசா தேவைப்படுமா?”என்று அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர்.
இதற்குப் நித்யானந்தா தரப்பில் பதிலளித்த அவரது சீடன் “அவர் தற்போது ஆஸ்திரேலியா அருகில் உள்ள USK (United States of Kailasa) எனும் தனிநாட்டில் இருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை அந்நாட்டிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது”என்று தெரிவித்துள்ளார்
அதே நேரத்தில், தனி நீதிபதியினால் முன்னர் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் வழக்கறிஞரை மாற்ற வேண்டுமென நித்யானந்தா தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.