
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் சில, இந்த சூழ்நிலையை வாய்ப்பாக மாற்றி, சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்ற புகார்கள் எழுந்துள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் 3 முதல் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும்போது, சுமார் ரூ.65,000 முதல் ரூ.1,00,000 வரை வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சில மருத்துவமனைகள் ரூ.2 லட்சம் வரை கூடுதலாக வசூலிக்கின்றன என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா சிகிச்சைக்காக எந்தவொரு தனியார் மருத்துவமனையும் சட்டவிரோதமாக அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. இவ்வாறு மீறி செயல்பட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அந்தந்த மாவட்டத்தின் பொதுச் சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்பதற்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், புகார்கள் இருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.