
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது தீயாய் எரியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தனது அதிநவீன போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் குவிக்க தொடங்கியுள்ளது.
இது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அல்ல, நேரடி ராணுவ தலையீட்டுக்கான துவக்கம் எனவும், வரவிருக்கும் நாட்களில் பெரும் தாக்குதல்களுக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ராணுவம் F-16, F-22, F-35 போர் விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் சிக்னல் மறைமுக கண்காணிப்பு சாதனங்களை அனுப்பியுள்ளது.
அதனுடன் USS NIMITZ எனும் விமானதாங்கி கப்பல் மற்றும் USS THOMAS HUDNER போன்ற போர்க்கப்பல்களும் இப்பிராந்தியத்தை நோக்கி அனுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஏற்கனவே பதற்றம் நிறைந்துள்ள இஸ்ரேல்-ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இதேநேரத்தில், இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட வீடியோவில், F-15 Eagle போர் விமானம் ஈரானில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுபோல ஈரான் ஏவிய ட்ரோனை இஸ்ரேல் ஏவுகணை தாக்கி அழித்ததையும் காண முடிகிறது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்கா-ஈரான் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கலாம் என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமைதி அழைப்புகளை விடுத்துள்ளன.