
தன்னை மிரட்டியதாக பெண் காவல் ஆய்வாளர் கௌசல்யா மீது சென்னை அடையாறு பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஷாம் பிரசாத், புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெண் காவலர்கள் தவறான முறையில் பணம் வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சமீபத்தில் குற்றசாட்டுக்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது
கடந்த பிப்ரவரி மாதம் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷாம் பிரசாத், அவரது உடல் நிலைக்கு ஏற்ப ஒரு மருத்துவ சான்றிதழை வழங்கியுள்ளார்.
இந்த சான்றிதழை அடிப்படையாக கொண்டு , தனது கணவன் 30 இலட்சம் வரதட்சனை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாக
அந்த பெண் டி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
ஆனால், அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராகவும் அவரது கணவருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக கௌசல்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
இதற்காக தான் காவல் ஆய்வாளர் கௌசல்யா டாக்டரை தனியாக வரவழைத்து அவர் கொடுத்த அந்த சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்றும், தவறான சான்றிதழ் கொடுத்ததாக எழுதி கையெழுத்திட வேண்டும் என்றும் மிரட்டியதாக தெரிவிக்கபடுகின்றது
அத்தோடு , அந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் லஞ்சம் வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் உங்களையும் வழக்கில் தொடர்பு படுத்துவோம் எனவும் கூறி தன்னை மிரட்டியதாக டாக்டர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து டாக்டர் ஷாம் பிரசாத் காவல் ஆய்வாளர் மீது புகார் அளித்தையடுத்து தற்போது அந்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல் உயர் அதிகாரிகளால் விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கு, அரசு அதிகாரிகள் மீது பொது மக்களிடையே நிலவும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்க கூடியதாக உருவெடுத்துள்ளது.