அகமதாபாத் விமான விபத்து “வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரம்” – பிரதமர் மோடி உருக்கம்!

Prime Minister Narendra Modi expresses deep sorrow over the Ahmedabad plane crash, calling it indescribable.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்விக்) நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 வகை விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சிக்கலுக்கு உள்ளாகி விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தில் மொத்தம் 242 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது கிடைக்கும் தகவலின்படி, இதில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையாக காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த துயரச்சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சியும், வேதனையும் அடைய வைத்துள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு என் இதயம் உடைந்துவிட்டது. இந்த சோக நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் என் எண்ணங்களும், இரங்கலும் இணைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முன்னெடுக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர் தொடர்பில் இருக்கிறேன்” என தெரிவித்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்து காரணம் குறித்து விரைவில் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.