
ஹரியானா சட்டசபை தேர்தலில் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளார்.
ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் – வினேஷ் போகட் வெற்றி பெறுவாரா? களம் எப்படி இருக்கிறது என்பதை சற்று விரிவாக பார்ப்போம்
ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது நவாப் சிங் சைனி முதல்வராக உள்ள நிலையில் , ஹரியானா சட்டசபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
இந்நிலையில் தற்போது ஹரியானா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஹரியானாவில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சிக்கு வர வேண்டுமானால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
ஹரியானாவை பொறுத்த வரையில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன
அதேபோல் ‘ஆம் ஆத்மி’ ‘ஜனநாயக ஜனதா கட்சி’ ‘ஆசாத் சமாஜ்’ ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நேற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. 31 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்
அதில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் வினேஷ் போகட்டின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததற்காக வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அங்கிருந்து திரும்பிய சில நாட்களிலேயே வினேஷ் போகட் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார், அவர் இப்போது ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் இந்த தேர்தலில் வினேஷ் போகட் வெற்றி பெற முடியுமா? அவர் இருக்கும் ஜுலானா தொகுதியில் நிலைமை என்ன என்பதை விரிவாக பார்ப்போம் !!
ஜுலானா தொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.இதுவரை இடைக்கால தேர்தல் உள்பட மொத்தம் 14 தேர்தல்கள் இத்தொகுதியில் நடந்துள்ளன.
தேசிய காங்கிரஸ் அணி ஒட்டுமொத்தமாக மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஜனதா கட்சி மற்றும் தேசிய லோக்தல் கட்சி தலா இரண்டு முறையும், சுதந்திர கட்சி, என்சிஎன், லோக்தல் கட்சி, ஹரியானா விகாஸ் கட்சி, தேசிய லோக்தல் கட்சி மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் வென்றன.
கடந்த 2000 மற்றும் 2005 இத்தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பின்னர், 2009, 2014 மற்றும் 2019 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
2009 தேர்தலில் இந்திய தேசிய லோக்தள வேட்பாளர் பர்மிந்தர் சிங் 45,576 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஷேர் சிங் வெறும் 32,765 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் ஜவவர் சிங் சைனி 2,508 வாக்குகள் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
அதேபோல், 2014 பொதுத் தேர்தலில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் வேட்பாளர் பர்மிந்தர் சிங் மீண்டும் வெற்றி பெற்றார். அவர் 54,636 வாக்குகள் பெற்றார், காங்கிரஸ் வேட்பாளர் தர்மேந்தர் சிங் 31,826 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். பாஜக வேட்பாளர் சஞ்சீவ் 12,013 வாக்குகள் பெற்று 4வது இடம் பிடித்தார்.
கடந்த 2019 தேர்தலில் ஜேஜேபி வேட்பாளர் அமர்ஜித் தாண்டா 61,942 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பர்மிந்தர் சிங் 37,749 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது . காங்கிரஸ் வேட்பாளர் தர்மேந்தர் சிங் 12,440 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்
இந்த மூன்று தேர்தல்களின் அடிப்படையில் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது. இந்நிலையில் இந்த தொகுதியில் வினேஷ் போகட் போட்டியிடுகிறார். அவரைப் பொறுத்தவரை இது உண்மையில் ஒரு சவாலாக இருக்கும் என்றே தோன்றுகிறது
ஆனால், காங்கிரஸ் கட்சியின் கணக்கு வேறு விதமாக இருக்கிறது. அது என்னவென்றால் ஜூலானா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் மற்றும் ஜாட் சமூகங்கள் உள்ளன. அவர்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி ஆளும் கட்சியான பாஜக மீது அதிருப்தி நிலவுகிறது. மறுபுறம், ஹரியானாவில் மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக சமீபத்திய சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன – இது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இது தவிர, வினேஷ் ஒரு நாடறிந்த மல்யுத்த வீரர். 100 கிராம் எடை அதிகரிப்பால் பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்காமல் போனதற்கு மக்கள் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த அனுதாபம் மற்றும் ஆளும் கட்சியான பாஜக மீதுள்ள அதிருப்தி ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத்துக்கு நிச்சயம் உதவும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.
ஒலிம்பிக்ஸ் கொடுத்த அனுதாபம் தேர்தலில் வெற்றி கொடுக்குமா என்பது அக்டோபர் 8 ஆம் தேதி அறிவோம் !!!