
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண் உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் அவர் உரையாற்றினார்.
முதல்வர் தனது உரையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான தண்ணீரை திறப்பதற்கு முன்னதாக மேற்கு மண்டல விவசாயிகளை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். ஈரோட்டில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி மற்றும் கருத்தரங்குக்கு தனது பாராட்டுகளை தெரிவித்த அவர், “இந்த பிரமாண்ட கண்காட்சி என் மனதிற்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது” என்றும் கூறினார்.
தமிழகத்தின் விவசாயிகளே இந்த மண்ணை வளமாக்கும் மூலக்கூறுகள் என்றும், அவர்கள் நலனுக்காகவே தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். வேளாண் உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய முன்னேற்றம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்ட அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் 488 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி மூலம் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.
81 லட்சம் விவசாயிகள் கூட்டுறவுத்துறையின் மூலமாக பல்வேறு நலன்கள் பெற்றுள்ளதாகவும், 2 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் இலக்கில் 1.84 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இலவச மின்சாரத்திற்காக அரசு இதுவரை 26,223 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளை ஏமாற்ற முயன்ற சிலர், அரசியலில் தோல்வியடைந்ததை மறைக்க முடியாது என்றும், விவசாயிகளின் உரிமைகளுக்காக தமிழ்நாட்டில் திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடர்ந்து அமையும் என்றும் உறுதியளித்தார்.