மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே”  : எம்.பி. சு. வெங்கடேசன்

MP Su. Venkatesan states that further research is not possible due to the unavailability of cow urine

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசின் கீழ் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆய்வுகள் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளின் பின்னர் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்,

இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில், 3ஆம் கட்ட அகழாய்வை நடத்திய ஸ்ரீராமன், ஏற்கனவே கிடைத்த பொருட்களே கிடைப்பதாக கூறி அகழாய்வை நிறைவு செய்தார்.

பின்னர் தமிழக அரசு தான் கீழடி அகழாய்வை முன்னெடுத்து தற்போது 10ஆம் கட்டம் வரை தொடர்கிறது.

முதல் இரண்டு கட்ட அகழாய்வின் 982 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்திருந்தாலும், இரண்டாண்டுகள் கடந்தும் மத்திய அரசு அதை வெளியிடவில்லை. மாறாக, அறிக்கையில் திருத்தம் செய்யுமாறு அறிவுறுத்தியது. ஆனால், அதனை மறுத்து “அறிக்கையில்  தவறில்லை” என அமர்நாத் பதிலளித்தார்.

இந்த நிலையில், மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சமீபத்தில் பேசும் போது , “இன்னும் அறிவியல்பூர்வமான முடிவுகள் தேவை” எனவும், அதற்குப் பிறகே அங்கீகாரம் அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார். இது தமிழ் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், “இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை. கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்”  என்று அமைச்சர் சொல்கிறார். கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே” என்று கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார்.