
தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற விவசாயி (வயது 52), கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் எனக்கோரி , ஜெயராமன் கடந்த 4ஆம் தேதி தருமபுரி மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தின் போது, தனது கோரிக்கைக்கு நேரடி தீர்வு கிடைக்காததையடுத்து மனமுடைந்த ஜெயராமன், அங்கு திடீரென தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடனே அவரை காப்பாற்றிய போலீசார், தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பல நாள் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் மாவட்டத்துக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்துக்கான முழுமையான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.