வடலூரில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு!

Traffic affected in Vadalur as the public stages road blockade demanding drinking water.

கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்து இன்று காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 20, 26, 27-வது வார்டுகளில் குடிநீர் வசதி முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வெப்பத்தின் மத்தியில் குடிநீர் இல்லாத அவலத்தால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாகவே நகராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரிடம் புகார் தெரிவித்தும் தீர்வு கிடைக்காததைத் தொடர்ந்து, மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து திடீரென காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப்பாதையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்போது தற்காலிகமாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும், உள்ளமைந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மின்மோட்டார் பழுது நீக்கப்பட்டு விரைவில் குடிநீர் விநியோகம் சீரடைய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சமாதானமாக கலைந்து சென்றனர். மக்கள் மீண்டும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்பதற்காக நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.