
சென்னை தாம்பரம் அருகே உள்ள அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விடுதி காவலர் மேத்யூ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் மா. கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:
“விடுதியில் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த காவலராலேயே இப்படிப்பட்ட அத்துமீறல் நிகழ்ந்திருப்பது எங்களுக்கே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வார்டன் விடுப்பில் இருந்த நேரத்தில் இந்த குற்றச்செயல் நடந்திருக்கிறது என்பது சோகமானது.
இது வரை காவலர் மேத்யூ மீது எந்த குற்றச்சாட்டு பதிவாகவில்லை. ஆனால், மாணவி தைரியமாக முன்வந்து புகார் அளித்ததன் மூலம் காவலர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.”
மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். “அன்னை சத்யா இல்லம் உள்ளிட்ட அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இயக்கும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தங்கும் விடுதிகளில் இனி ஆண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியாது. அவர்களுக்குப் பதிலாக பெண் காவலர்களையே நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது,” என தெரிவித்தார்.
இந்த முடிவுகள் அனைத்து பெண்கள் விடுதிகளில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதி அளித்தார்.