
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து என்ற கிராமத்தில் அமைந்துள்ள துணை மின்நிலையம் , அந்த பகுதியில் உள்ள காற்றாலை மின்நிலைகளுக்கு மின் விநியோகம் செய்யும் முக்கிய மையமாக உள்ளது.
இன்று அதிகாலை, அந்த மின்நிலையத்தில் அமைந்திருந்த ஒரு மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்தது.
அந்த நேரத்தில் அதிக வேகத்தில் காற்று வீசியதால், தீ வேகமாக பரவி மற்றொரு மின்மாற்றிக்கும் பரவியுள்ளது .
தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும், நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் சரவண பெருமாள் உத்தரவின் பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில் கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்துபல வாகனங்களில் தண்ணீரை பீய்ச்சி, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய தீயணைப்பு பணி, மதியம் 12 மணிக்கு மேல் வரை நீடித்தது. தற்போது தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்துக்கு என்ன காரணம் என்பதை தெளிவாகக் கண்டறிய, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மின்துறை சார்பில் நட்டீடு மதிப்பீட்டு பணியும் மேற்கொள்ளப்படுகிறது.