
புதுக்கோட்டையில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தற்போது நடக்கும் “அராஜக ஆட்சிக்கு” முடிவுக்கட்டப்படும் என உறுதியாகத் தெரிவித்தார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளதாகக் கூறிய அவர், ஒரே நாளில் எட்டு கொலைகள் நடைபெறும் நிலை உருவாகியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
அதேவேளை, ஊழல் விவகாரங்களில் தற்போதைய அரசு முற்றிலும் அகப்பட்டு விட்டதாகவும், அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து கொண்டிருப்பது மக்களை அச்சுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
முருகன் சம்மந்தமான மாநாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்றால், நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று மாநாடு நடத்தப்படும் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்தார்.
மேலும், கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த எச். ராஜா, ஒரு எம்.பி. சீட்டுக்காக அவர் ‘டார்ச் லைட்டை அடகு வைத்துவிட்டார்’ என்றே குற்றம்சாட்டினார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கட்டுப்பாடான சூழலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.