
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் யஷ்வந்த் (வயது 14), உள்ளூர் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் கடந்த இரவு வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் டியூஷனுக்குச் சென்றிருந்தார். அதன்பின்னர், சிறுநீர் கழிக்க டியூஷன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் அவர் அறியாமல் பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மயங்கி வீழ்ந்த யஷ்வந்தை அவரது பெற்றோர் மற்றும் அருகிலுள்ளவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், நிலைமை மோசமாகிவிட்டதால் யஷ்வந்த் உயிரிழந்தார்.
சிறுவனின் மரணம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.