சென்னையில் 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல்! உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு!

"News report on 8-year-old girl in Chennai who was drugged and sexually assaulted; assistant sub-inspector accused."

8 வயது சிறுமி மயக்க ஊசி செலுத்தப்பட்டு போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி திடீரென காணாமல் போயுளார். தாயில்லாமல் வளர்ந்து வரும் அச்சிறுமியை அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் வளர்த்து வருகின்றனர்.

சிறுமி மாயமானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் தீவிரமாக தேடியபோது, நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி இருப்பதாக  சக தோழி ஒருவர் சிறுமியின் தந்தையிடம் கூறியுள்ளார். அங்கு சென்ற குடும்பத்தினர்  மயங்கிய நிலையில் இருந்த  சிறுமியை மீட்க முயன்றபோது பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து அந்த வீட்டில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.  

மிகுந்த போராட்டத்திற்கு பிறகு சிறுமியை மீட்ட பெற்றோர்,தனக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு  பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சிறுமி தெரிவித்தை கேட்டு அதிர்ந்து போயுள்ளனர்.

இதையடுத்து சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுமியை மீட்கும் போது தாக்குதலுக்குள்ளான தாத்தாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே நேரத்தில் சம்பந்தப்பட்ட வீட்டில் போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் இருந்ததாகவும், அவர்தான் சிறுமியை துன்புறுத்தியதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை மறுத்துள்ள அந்த உதவி ஆய்வாளர், ‘‘ உறவினர்களே சிறுமியின் துன்புறுத்தியவர்கள் அது குறித்து சைல்டு ஹெல்ப் லைனில் புகார் அளிக்கப்போவதாக கூறியதால் தன் மீதே பொய் புகார் தெரிவிக்கப்பட்டதாக SI குற்றஞ்சாட்டியுள்ளார்.  

சம்மந்தப்பட்ட எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் குடும்பத்தினர் மீதே போலீசார் பழி சுமத்துவதாக  சிறுமியின் தந்தை கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் முறையீடு செய்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.