
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் நடைபெற்ற 8 படுகொலைகளைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை, பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்; ஒருவர் அடையாளம் தெரியாத நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மது காரணமாக ஏற்பட்ட மோதலில் பிரகதீஸ்வரன் என்பவர் கொல்லப்பட்டார்; இதற்குப் பழிவாங்க கஸ்தூரி என்ற பெண்ணும் கொள்ளப்பட்டுள்ளார் .
தஞ்சாவூரில் மதுக்கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜய் என்பவர் படுகொலை செய்யப்பட்டதுடன், மாநிலத்தின் பல இடங்களில் சுயம்புகனி, உமா, இராஜசேகரன், அஸ்வினி என பலர் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் ஒரே நாளில் நடைபெற்றது கவலையளிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது முற்றிலுமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள்களின் காரணமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதையும், இதனை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் திமுக அரசு மேற்கொள்வதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசின் முதன்மை கடமையான மக்களின் பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதையும் திமுக அரசு புறக்கணித்து, வெறும் பிரச்சார அரசியலில் மூழ்கி இருக்கிறது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும் இதுபோன்ற கொடூரமான சம்பவங்களை பா.ம.க. தொடர்ந்து எதிர்த்து வந்ததாகவும், ஆனால் அரசு நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் அவர் கூறியுள்ளார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொற்கால ஆட்சி என்ற பொய்யான நம்பிக்கையை பேணிக்கொண்டு மாய உலகில் வாழ்வதைவிட, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், காவல்துறையை சீர்படுத்தி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்