
ஜம்மு – காஷ்மீரில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அங்கு கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்திய பாதுகாப்புப் படை “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது.
தனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ஜெய்சல்மர் உள்ளிட்ட பகுதிகளில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. ஆனால் இந்தியா, எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் இந்த தாக்குதல்களை வெற்றிகரமாக தடுத்து வருகின்றது
இந்த பதற்றமான சூழலில், ஸ்ரீநகரில் உள்ள தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 மாணவர்கள், மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்கள் விரைவில் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மேலும் உதவி தேவைப்படும் மாணவர்கள் மாநில அரசின் உதவி எண்கள் 7550331902 மற்றும் 8069009901 மூலம் தொடர்பு கொண்டு தேவையான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது