பேருந்தில் 4 சவரன் நகை திருட்டு – ஊராட்சி மன்றத் தலைவர் கைது

"Panchayat President arrested for stealing 4 sovereigns of gold from a bus passenger."


சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து பேருந்தில் சென்னை திரும்பிய அவர், வீட்டிற்கு வந்தபோது தமக்கு சொந்தமான 4 சவரன் நகை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோயம்பேடு கே–10 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், வரலட்சுமியின் அருகே பேருந்தில் அமர்ந்திருந்த பெண் நகையை திருடியதாக தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அந்த பெண் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது அவர் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பாரதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாகவும் பாரதி மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.