
சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியை சேர்ந்த மகாதேவ், இன்ஜினியரிங் பட்டதாரி. 2021ஆம் ஆண்டு அவரிடம், அரசு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கொங்கணாபுரத்தை சேர்ந்த நித்தியானந்தம் உள்ளிட்ட சிலர் ரூ.22 லட்சம் பெற்றுள்ளனர்
இதுகுறித்து மகாதேவ் அளித்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நித்தியானந்தம், சந்தோஷ்குமார் உள்ளிட்ட ஆறு பேர், மேட்டூர் மற்றும் இடைப்பாடி பகுதிகளை சேர்ந்த 33 இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக நம்ப வைத்து மொத்தம் ரூ.3.50 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் நித்தியானந்தம் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மீதமுள்ள ஐந்து பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதில், கொங்கணாபுரம் காளிப்பட்டி ரோட்டில் வசிக்கும் சந்தோஷ்குமார் , சந்தோஷ்பாண்டி (51), சேலம் சித்தனூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று தனிப்படை போலீசார் சித்தனூரில் சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில், சந்தோஷ்குமார் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் நர்சிங் கல்லூரி நடத்தி வருவதும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததும், அந்த பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்ததும் தெரியவந்துள்ளது.