13 வயது சிறுவன் வாயில் பீர் ஊற்றி கொலை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13)  ஜூலை 2ம் தேதி மாலை 4 மணி அளவில் இரண்டு மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார்.

சிறுவன் கடத்தப்பட்டதை குறித்து பெற்றோர், அஞ்செட்டி காவல் நிலையத்தில் ஜூலை 2ம் தேதி இரவே புகார் அளித்தனர். அப்போது பணியில் இருந்த போலீசார் பல கோடி மிரட்ட கோடீஸ்வரன் பிள்ளையா? என்று அலட்சியப்படுத்தி உள்ளார்.

பின்னர் சிறுவனின் பெற்றோர் ரோகித் விளையாடிய இடத்தின் அருகே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் ரோகித் விளையாடியது மற்றும் அவன் தனியாக சென்ற காட்சி மட்டும் பதிவாகி உள்ளதை பார்த்துள்ளனர்.  பின்னர் ரோகித்துடன் விளையாடிய சிறுவன் தான் ரோகித், மாதேவன் என்ற இளைஞருடன் காரில் சென்றதாக கூறியுள்ளான். இந்த தகவலின் படி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கர்நாடகப் பதிவெண் கொண்ட சாண்ட்ரோ என்ற கார் அதேப் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில்,  ரோகித்தின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து சிறுவனை கண்டுபிடித்து தர கோரி நேற்று (ஜூலை 3) காலையில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடத்தப்பட்ட சிறுவன் ரோகித் அஞ்செட்டி பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். சிறுவனின் பெற்றோர் மாதேவன் மற்றும் கர்நாடகா மாநிலம் உனிசனள்ளியை சேர்ந்த மாதேவன் ஆகிய இருவரை சந்தேகிப்பதாக தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் இவர்களை  பிடித்து  விசாரணை நடத்திய நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரோகித் ஜூலை 2ம் தேதி 8 மணியளவில் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுவனின் கொலைக்கான காரணம் குறித்த இளைஞர்களின் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரோகித்தை காரில் அழைத்துச் சென்ற மாதேவன் என்ற நபர் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் பெண்ணுடன் கடந்த 1ம் தேதி தனிமையில் இருந்துள்ளார். அதனை சிறுவன் ரோகித் பார்த்துள்ளார். இதனை மற்றவர்களிடம் சொல்லி விடுவானோ என்ற அச்சத்தில் தனது நண்பனான மற்றொரு மாதேவனிடம் தகவல் கூறியுள்ளார்.

இந்நிலையில் இருவரும் இணைந்து 2ம் தேதி ரோகித்திடம் நைசாக பேசி காரில் அழைத்துச் சென்று ரோகித்தின் வாயில் பீரை ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்துள்ளனர். பின்னர் கொண்டை ஊசி வளைவில் 50 அடி உயரத்திழிருந்து இருந்து கீழே தூக்கி போட்டு கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.