
சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் எலிகன் தெருவைச் சேர்ந்த அமர்நாத் தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். அவரது முதல் மனைவி சங்கீதாவுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என இரு மகள்கள் உள்ளனர். நந்தினி எம்.எச் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார
10 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா அமர்நாதிடம் இருந்து பிரிந்ததால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமர்நாத் மாற்றுத்திறனாளி பெண்ணான உஷாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அமர்நாத், மகள்கள் மற்றும் இரண்டாவது மனைவி உஷா ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், சித்தி உஷா திருமணமான நாளிலிருந்தே நந்தினியை அடித்து, வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நந்தினி, இதை தந்தை அமர்நாத்திடம் பலமுறை கூறினாலும் எந்த பயனும் ஏற்படவில்லை என தெரிகிறது.
சித்தியின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து, மன அழுத்தம் அதிகமான நிலையில், நேற்று இரவு நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். உறவினர்கள் அவரை மீட்டு பெரியார் நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நந்தினியின் உறவினரான நிர்மல் குமார் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்தியின் சித்ரவதை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.