ரூ.12 லட்சம் லஞ்சம் : ஊராட்சி மன்றத் தலைவர் கையும் களவுமாக கைது!

Panchayat council president arrested after being caught red-handed taking ₹12 lakh bribe

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏ.கே. சீனிவாசன், ஆம்பூர் அருகே மேல் சாணாங்குப்பம் பகுதியில் 7 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் அமைக்க திட்டமிட்டார். இதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் சிவகுமாரை அணுகினார். அப்போது, தேவையான அனுமதிகளை பெற்றுத் தர ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதற்காக கடந்த ஒரு ஆண்டில் சீனிவாசன், சிவகுமாருக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருந்தார். மீண்டும் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய நிலையில், சீனிவாசன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறைக் காவலர்கள் ரசாயனத்துடன் கூடிய பணத்தை சீனிவாசனிடம் கொடுத்துள்ளனர். சீனிவாசன் ரூ.2 லட்சம் கொடுத்ததும், மறைந்திருந்த டிஎஸ்பி ராஜீவ், ஆய்வாளர் கௌரி, உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சிவகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

பின்னர் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

லஞ்சப் பணம் பெற்றபோது ஊராட்சி மன்றத் தலைவர் சிவகுமார் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.