
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் 10-ம் வகுப்பில் பயிலும் சதீஷ்குமார் (15) என்ற மாணவர், ஆரணி அருகே சுந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி மேகநாதனின் மகன் ஆவார். வழக்கம் போல் இன்று காலை அரசு பஸ்சில் பள்ளிக்கு வந்த சதீஷ்குமார், பள்ளிக்கு அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகம் பகுதியில் நடந்து சென்றபோது, அதே வகுப்பில் பயிலும் வசீகரன் என்ற மற்றொரு மாணவருடன் மோதல் ஏற்பட்டது.
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட இந்த சண்டையில் வசீகரன் திடீரென கத்தியால் சதீஷ்குமாரின் பின்பக்க கழுத்தில் குத்தியதோடு, தடுக்க முயன்றபோது அவரது கைவிரல்களிலும் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவத்தைக் கண்ட சக மாணவர்கள் அலறி ஓடிய போது அங்கிருந்த பொதுமக்கள் இனைந்து சண்டையை தடுத்துள்ளனர்
மேலும் உடனடியாக காயமடைந்த சதீஷ்குமாரை அருகிலுள்ள ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வசீகரனும் இச்சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரணி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக கூறியதாவது:
“இருவரும் இந்த ஆண்டு பள்ளியில் சேர்ந்த புதிய மாணவர்கள். அவர்களுக்கு இடையே ஏற்கனவே தகராறு நடந்ததா என்பது தெரியவில்லை. முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்ந்து, பள்ளி வளாகம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.