
பெங்களூருவில் ஐபிஎல் 2025 தொடரை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வீரர்களை நேரில் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இந்நிலையில், அணியின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது
படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக சிவாஜிநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்த துயர சம்பவம் அரங்கேறியதற்கு அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதியதாக இல்லாதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நிகழ்வின் போது 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததாக கூறப்பட்டாலும், கூட்டத்தின் அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்குப் பிறகு, கர்நாடக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பாஜக, மாநில அரசு தங்களின் தவறான ஏற்பாடுகளால் மக்கள் உயிரை இழக்க நேரிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மாநில துணை முதலமைச்சர் விளக்கமளித்து, “பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மக்கள் திரண்டதால்தான் இந்த துயரம் நேர்ந்தது” என கூறி, மக்கள் மத்தியில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.