
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (34), ஒரு சாதாரண விவசாய கூலித் தொழிலாளி. இவர் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் 1.5 ஏக்கர் அளவிலான ஏலத் தோட்டத்தை வைத்திருக்கிறார்.
இந்நிலையில், அவரது வங்கி கணக்கில் ரூ.1,05,41,000 டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தேனி வருமான வரித்துறை அலுவலகம் தலைமையிலான அதிகாரிகள் அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினர்.
அதில், பணம் எவ்வித வருமான ஆதாரமுமின்றி வரவு செய்யப்பட்டதையடுத்து, வருமான வரி சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ் அவர் நேரில் ஆஜாகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிகண்டன் அதற்கமைய வருமான வரித்துறையை நேரில் சந்தித்துப் பேசினார். இதில், அவர், “இந்த பணத்துடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. யார் டெபாசிட் செய்தது எனும் தகவலும் எனக்குத் தெரியவில்லை” என தெரிவித்தார்.
சமீபத்தில் பல வங்கிக் கணக்குகளில் தவறுதலாக பணம் வரவான சம்பவங்கள் நடந்துள்ளதையடுத்து, இதுவும் அதே வகையிலான தவறுதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த பணம் எந்த வங்கியில் எப்போது, யாரின் மூலமாக வரவு செய்யப்பட்டது? அந்த கணக்கின் பயன்பாட்டு வரலாறு என்ன? என்பன குறித்தும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.